பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ராமதாஸின் ஆதரவாளரான ஜி.கே. மணியை அன்புமணி நீக்கியுள்ளார். கட்சியின் நெருக்கடியான சூழலை காரணம் காட்டி, ராமதாஸுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் உச்சம் பெற்றுள்ளது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்தார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பாமக அலுவகத்தின் முகவரி மற்றும் பாமக தலைவர் என்று குறிப்பிட்டு அனுப்பு உள்ளதாக குற்றம்சாட்டினர். பாமக கட்சி விதிகளின்படி தலைவர் ராமதாஸ் தான் என்று தெரிவித்தனர். இதனிடையே ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாமகவின் மூத்த தலைவரான ஜி.கே.மணியை அக்கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகரிக்க கோரிக்கை
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாதுகாப்பு அதிகரிக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் அவரது ஆதரவு எம்எல்ஏ அருள் மனு அளித்துள்ளார். அதில் எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீபகாலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் அவர்கள் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பாமகவினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.
மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமகவின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
பரிசோதனை கருவி
எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா அவர்கள் வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர்அய்யா அவர்களை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலில் பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
