நீட் தேர்வின் பாதகங்கள்: இந்திய மொழிகளில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராகப் பரப்புரை மேற்கொண்டது.
ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்தோம். அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் இவ்வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.
ஒடிசா கடற்கரையில் மோடி 3.0 மணற்சிற்பம்: சுதர்சன் பட்நாயக் அசத்தல்!
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை திமுக தலையிலான தமிழக அரசு அமைத்தது. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் 33 நாட்களில் ஆய்வை முடித்து தங்களது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தனர். மொத்தம் 165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.