முல்லைப் பெரியாற்றில் கேரளா புதிய அணை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

MK Stalin letter to union govt regarding kerala to build new dam in Mullai Periyar Dam smp

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லையென்றால், தேவைப்படும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனத்  தெரிவித்தும் மத்திய ற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, மாண்பமை உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: பதற வைக்கும் வீடியோ காட்சி..!

இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள், ஒன்றிய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தப் பிரச்சினையில் மாண்பமை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios