Asianet News TamilAsianet News Tamil

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1.06 கோடி பயனாளிகளுக்கு தனித்தனியாக லெட்டர் போட்ட ஸ்டாலின்!

மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்

MK Stalin letter to kalaignar magalir urimai thogai Beneficiaries smp
Author
First Published Sep 22, 2023, 4:13 PM IST

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அன்றைய தினமே பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: “தங்களது அன்புக் கட்டளையால் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம்.

அப்படியெல்லாம் பண்ணாதீங்க: வானதி சீனிவாசனுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள், புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது 'திராவிட மாடல்' அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன.

இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம்தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான 'மகளிர் உரிமைத் திட்டம்'. இந்தத் திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.

பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் ஒதுக்கீடு வழங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்படுவதால், 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை. உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios