தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம், ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அ.தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியான பிறகு, உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி, அவதூறு பரப்பிகொண்டு இருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

கருத்துகளை பகிர்ந்து கொண்ட மக்கள்

இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் பயனாளிகள் நேரடியாக தங்கள் கருத்துக்களையும், கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் கனவுகளையும் காணொலி வாயிலாக முதல்வரிடம் பகிர்ந்து கொண்டனர்.

இபிஎஸ், ஆளுநரை தாக்கிய முதல்வர்

பின்பு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கடுமையாக தாக்கி பேசினார். இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ''சமூகநீதி அரசை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! ஆதிதிராவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆமாம் சாமி போட்ட அதிமுக‌

அதுவும், இவை எல்லாவற்றையும் எந்த சூழ்நிலைகளில் நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்? நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, கொரோனா என்ற கொடுமையான பாதிப்பு உச்சத்தில் இருந்தது! நல்லது எதற்குமே ஒத்துழைக்காத, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே சிந்தித்து செயல்படும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஒன்றிய அரசில் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம், ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அ.தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியான பிறகு, உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி, அவதூறு பரப்பிகொண்டு இருக்கிறார்கள்.

ஆளுநர் போடும் முட்டுக்கட்டை

தமிழ்நாட்டிற்கும், ஒன்றிய அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் என்ற பொறுப்பில் இருப்பவர். என்ன செய்கிறார் என்றால் உங்களுக்கே தெரியும்! உங்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன்னுடைய முதல் வேலை என்று ஆளுநர் செயல்படுகிறார். ஒன்றிய அரசே நிதி தர மறுத்து புறக்கணித்தாலும், அவர்கள் வெளியிடும்புள்ளிவிவரங்களில் எல்லாம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு முதலிடத்தில் இருக்கும் சாதனையை செய்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு.

மக்கள் கனவை நிறைவேற்றுவேன்

தமிழ்நாட்டின் கஜானாவை சுரண்டிய கடந்தகால அதிமுக ஆட்சியாளர்கள், மக்களால் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர், நாம் மகளிருக்கான உரிமைத் தொகையை வழங்க மாட்டோம் என்று சொன்னார்கள். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது, இதில் எங்கே இலவசப் பயணம் வழங்கப்போகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் திராவிட மாடல் அரசு இந்த திட்டங்களை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது. இப்போது நாம் அடுத்தகட்ட கனவை காணவேண்டிய நேரம்! உறுதியாக சொல்கிறேன் - உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன்! உங்கள் கோரிக்கைகளை நான் திட்டங்களாக உருவாக்கித் தருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.