Udhayanidhi Stalin: துணைமுதல்வராகிறார் உதயநிதி, மீண்டும் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, நாசர்
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 3.30 மணிக்கு துணைமுதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம், உதயநிதி துணைமுதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றைய தினம் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 3.30 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநர் முன்பாக தமிழகத்தின் துணைமுதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சரவையில் ரீ எண்ட்ரி
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 15 மாதங்களாக சிறை தண்டனை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை மாற்றத்திற்கான தமிழக அரசின் பரிந்துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி சிறைவாசத்தின்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.
இதே போன்று பால்வளத்துறையை நிர்வகித்து வந்த முன்னாள் அமைச்சர் அமைச்சர் நாசர் தொடர் சர்ச்சைகளின் காரணமாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சரவையில் புது முகம்
தமிழக அமைச்சரவையில் புதிதாக ஆர்.ராஜேந்திரன், கோ.வி.செழியன் ஆகியோர் இடம் பெற உள்ளனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
துறை மாற்றம்
இந்த வரிசையில் ஏற்கனவே அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கும் சிலரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மூத்த அமைச்சரான பொன்முடி உயர்கல்வி துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் மெய்யநாதன் அந்த துறையில் இருந்து மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2 முறை துறை மாற்றப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்து பால்வளத்துறை மற்றும் காதி துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மனிதவள மேம்பாடு மற்றும் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து மாற்றப்பட்டு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கம்
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மனோ தங்கராஜ், சிறுபான்மை மற்றும் அயலகத் தமிழர் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள கே.ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.