புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

Minister senthil balaji transferred to puzhal prison from kauvery hospital

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

2024 தேர்தல்: பாஜக எப்படி தயாராகிறது? வியூகம் என்ன?

அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவரது ஜாமீன் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, அவரது நீதிமன்ற காவலானது, வருகிற 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்ற காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதால், புழல் காவல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் செந்தில் பாலாஜி தற்போது இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மற்றும் சட்டவிரோத கைது ஆகிய இரண்டு மனுக்கல் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என உத்தரவிட்டார். ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் 3ஆவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios