2024 தேர்தல்: பாஜக எப்படி தயாராகிறது? வியூகம் என்ன?
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜக, அதற்காக பல்வேறு வியூகங்களையும் வகுத்துள்ளது.
மத்திய பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சியில் உள்ளது. எதிர்வரவுள்ள 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றி ஹாட்ரிக் அடிப்போம் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சூளுரைத்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைவது, ஆட்சி மீது இயல்பாகவே ஏற்படும் அதிருப்தி, கூட்டணி கட்சிகள் மாறியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அக்கட்சிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அதனையெல்லாம் உடைத்தெறிந்து 2024 பொதுத்தேர்தலில், கடந்த முறையை காட்டிலும், இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை அக்கட்சி தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் நோக்கில் நாடு தழுவிய பிரசாரங்களை மேற்கொள்ள அக்கட்சி தொடங்கியுள்ளதற்கிடையே, பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, பாஜகவின் வியூகத்தை வகுக்க விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பாஜகவின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேசினோம். பெயர் குறிப்பிடாமல் பேசிய அவர்கள், சில ஆய்வுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன; 2024 தேர்தல் வரை இந்த ஆய்வுகள் தொடரும் என்றனர். மொத்தம் நான்கு முக்கிய கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு, அதனை கணக்கிட்டு வரும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, வியூகத்தை முடிவு செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் முடிவுகளை ஒருங்கிணைக்க டெல்லியில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூறுகையில், சில முக்கிய யோசனைகள் பிரதமர் மோடியிடம் இருந்து வருவதாக கூறுகிறார். கடந்த தேர்தலில் 160 இடங்களை இழந்தது குறித்து பூத் அளவிலான தரவுகளைப் பெற முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை? மற்ற கட்சியின் வேட்பாளர்களிடம் சிறந்த குணாதிசயங்கள் என்ன இருந்தது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்களிடம் கேட்டு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சுமார் 40,000 பூத் பணியாளர்கள் கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டதாகவும், 1 லட்சம் வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1 கோடி பேரிடம் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பழங்குடியின பகுதிகளில் இருந்து யாத்திரையை தொடங்கிய மத்தியப்பிரதேச முதல்வர்!
பாஜகவை பொறுத்தவரை பூத் கமிட்டி அளவிலான உத்திகளுக்கு அக்கட்சி பெயர் பெற்றது. 2024 தேர்தலில் தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக மிஷன் சவுத் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த முறை மைக்ரோ மேனேஜ்மெண்ட் அடிப்படையில் பூத் கமிட்டியை பலப்படுத்தி அதன்மூலம் மக்களை சென்றடைய அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், இஸ்லாமிய சமூகத்தை கவர்ந்திழுக்கவும் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. முஸ்லிம்களை கட்சிக்கு கொண்டு வருவதற்கான ஆக்ரோஷமான அணுகுமுறையையும் அக்கட்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. பாஜக சிறுபான்மை அணி சார்பில் 'மோடி மித்ரா' எனும் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த இடத்தில், பொது சிவில் சட்டம், முத்தலாக் போன்ற விவகாரங்களை தான் பங்கேற்கும் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருவது கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் மக்கள்தொகை 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும், இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதிக்கம் நிறைந்த 65 நாடாளுமன்றத் தொகுதிகளை அக்கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. பாஜகவின் சிறுபான்மை அணி சார்பில் அந்த தொகுதிகளில் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. பாஜக சிறுபான்மை அணித்தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், “நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ள ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் குறைந்தது 5,000-10,000 பேர் உள்ளனர். அவர்களுடன் பேசி, அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எப்படி உதவியது, மேலும் அவர்கள் மேம்பாட்டிற்கு என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவோம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடியின் 'சம்வாத்' நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
அமலாக்கத்துறை - சிபிஐ என்ன வித்தியாசம்? சக்திவாய்ந்ததாக அமலாக்கத்துறை உருவாக என்ன காரணம்?
இந்த பிரசாரத்தின் கீழ், இந்த அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக சிறுபான்மை அணி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும். வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வதில் தொடங்கி, சமூக ஊடகங்கள் மூலம் கட்சியை மக்களிடம் கொண்டு செல்வது, சிறு கருத்தரங்குகள், விளம்பரப் பிரசாரங்கள் போன்றவற்றின் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கான மோடி அரசின் நலத்திட்டங்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 80 இடங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 65 இடங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாகவும் முஸ்லிம்கள் உள்ளனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில், மேற்கண்ட 80 இடங்களில், 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 22 இடங்களில் தோல்வியை சந்தித்தது.
இந்த தொகுதிகளில் பிரதமர் மோடியின் 45 பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தப் பேரணிகளுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள சுனில் பன்சால், வினோத் தாவ்டே மற்றும் தருண் சுக் ஆகிய மூன்று தேசிய பொதுச் செயலாளர்களை பாஜக பணித்துள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்த 160 மக்களவைத் தொகுதிகள், தலா 4 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், பிரதமர் மோடியின் பிரமாண்ட பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் சுமார் 45 முதல் 55 பேரணிகள் அல்லது பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கான உத்தி வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 160 தொகுதிகளில் நடைபெறும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தும் வியூகம், கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் எனவும், 2024 தேர்தலில் 3ஆவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் எனவும் அக்கட்சி நம்புவதாக தெரிகிறது.
இந்த 160 தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் முடிந்ததும், இரண்டாம் கட்ட பிரசாரத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி மற்றும் பிற பெரிய தலைவர்களுக்கான திட்டங்கள் மற்றும் மீதமுள்ள 383 தொகுதிகளுக்கான திட்டங்கள் முடிவு செய்யப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.