பழங்குடியின பகுதிகளில் இருந்து யாத்திரையை தொடங்கிய மத்தியப்பிரதேச முதல்வர்!

பழங்குடியின பகுதிகளில் இருந்து ஒரு மாத கால யாத்திரையை மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கியுள்ளார்

Madhyapradesh cm Shivraj Singh chouhan tarts month long yatra from tribal regions

மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது, பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் மது போதையில் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா, சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு நெருக்கமானவர் எனவும் கூறப்பட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபரை தன் வீட்டுக்கு அழைத்து அவரது கால்களை கழுவி பரிகாரம் தேடினார் அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்குகளுக்காக பாஜகவினர் இதுபோன்று செய்வதாக விமர்சிக்கப்பட்டது. மேலும், பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஆனால், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என அக்கட்சியினர் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் வீடும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.

இந்த நிலையில், பழங்குடியின பகுதிகளில் இருந்து ஒரு மாத கால யாத்திரையை மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கியுள்ளார். அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், ஒரு மாத கால விகாஸ் பர்வா (வளர்ச்சித் திருவிழா) யாத்திரையை சிவராஜ் சிங் சவுகான் தொடங்கியுள்ளார். பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த அம்மாநிலத்தின் தார் மற்றும் பர்வானி மாவட்டத்தில் இருந்து யாத்திரையை தொடங்கியுள்ள அவர், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கிறாரா? அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத் பவார்!

தார் மாவட்டத்தின் குக்ஷி தாலுகாவில் நர்மதா நதிக்கரையில் உள்ள மேகநாத் காட் என்ற இடத்தில் பாசன திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி ஒரு மாத கால வளர்ச்சித் திருவிழா முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். ரூ.2,771 கோடி மதிப்பிலான இந்த திட்டம், நிலத்தடி குழாய் மூலம் தார் மாவட்டத்தில் உள்ள சுமார் 1.25 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்குச் சொந்தமான 75,000 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் சொட்டுநீர் அமைப்புகள் மூலம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தை உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பர்வானி மாவட்டத்தில் உள்ள நாகல்வாடியில் ரூ.1,173 கோடியிலும், பட்டி பகுதியில் ரூ.55 கோடியிலும் இரண்டு சொட்டுநீர்ப்பாசனத் திட்டங்களையும் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு திட்டங்களும் பர்வானி மற்றும் அண்டை மாவட்டமான கர்கோனில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு போதுமான நுண்ணீர் பாசன வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பர்வானி நகரில் சாலை பேரணி நடத்திய சிவராஜ் சிங் சவுகான், தார் மற்றும் பர்வானி மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். 

மத்தியப்பிரதேச மாநில பாஜக ஆட்சியை குறிவைத்து போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோரின் டிரெண்டிங் வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளதை சுட்டிக்காடிய அவர், “என்னால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாமல் போனதால்தான், அதன் தலைவர்கள் என்னைத் தவறாக சித்தரிக்கிறார்கள்.” என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios