அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிச., 4ஆம் தேதி வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக 10 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 11ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கடையிசாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 22ஆம் தேதி (இன்று) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றம் காவலை வருகிற டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
வெற்றியின் டிஎன்ஏ: சத்குரு அகாடமி நடத்தும் 12ஆவது மாநாடு!
முன்னதாக, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வருகிற 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.