வெற்றியின் டிஎன்ஏ: சத்குரு அகாடமி நடத்தும் 12ஆவது மாநாடு!
சத்குரு அகாடமி நடத்தும் வெற்றியின் டிஎன்ஏ-வின் 12ஆவது பதிப்பு கோவையில் நடைபெறவுள்ளது
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா அறக்கட்டளையின் ஒரு பகுதியான சத்குரு அகாடமியின் (முன்பு ஈஷா லீடர்ஷிப் அகாடமி) முதன்மை திட்டமான ‘இன்சைட்: தி டிஎன்ஏ ஆஃப் சக்சஸ்' (வெற்றியின் டி.என்.ஏ.வுக்கான நுண்ணறிவு) எனும் வணிகத் தலைமைத்துவத்துக்கான மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் தலைமையில் 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் புகழ்பெற்ற மற்றும் மிகவும் வெற்றிகரமான வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது வெற்றிக் கதைகள் குறித்து கலந்துரையாடுவார்கள்.
அந்ததவகையில், இதன் 12ஆவது பதிப்பு நவம்பர் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறவுள்ளது. இதில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோருக்கான மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்ளவுள்ளார். அவர், இந்த நிகழ்ச்சியில் பேச்சாளராகப் பங்கேற்கவுள்ளார்.
அவர் தவிர, ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிர்வாக தலைவர் டாக்டர்.கிருஷ்ணா எல்லா, வினிதா ஹெல்த் மற்றும் தெரசா மோட்டார்ஸ் தலைவர் வினோத் கே தாசரி, அகிலிடாஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அபிஷேக் கங்குலி, காரட்லேன் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான மிதுன் சச்செட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்சைட்: தி டிஎன்ஏ ஆஃப் சக்சஸ் 12ஆவது பதிப்பின் கருப்பொருள், ‘எழுச்சி பெறும் பாரதத்தில் மலர்ச்சி’ என்பதாகும். இதில் பேச்சாளர் அமர்வுகள், வொர்க்ஷாப், கேள்வி பதில் அமர்வுகள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் பங்கேற்பாளர்களுக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் நடைபெறும். 'ரைசிங் பாரத்' விழாவைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், தொழில்முனைவோர் தங்கள் தொழில் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க, நாடு வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் பங்கு வகிக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காற்றுத் தரம்: டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அட்வைஸ்!
மேலும், பங்கேற்பாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடும் சத்குரு ஜக்கி வாசுதேவ், சவால்கள், வாய்ப்புகள் மற்றும் மிகவும் பயனுள்ள விஷயங்கள், தாக்கம் மிக்க மனிதனாக மாறுவதில் ஆழ்மனதின் பங்கைப் பற்றிய தனது ஞானத்தையும் முன்னோக்கையும் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்சைட்டின் 12ஆவது பதிப்பில் 240க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். வெற்றித் தலைவர்கள் 25க்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து அவர்களது திட்டத்தில் இருந்து சிறந்த நுண்ணறிவுகளைப் பங்கேற்பாளர்கள் பெறுவதற்கு வெற்றியின் டிஎன்ஏ பணியாற்றும். இந்த நிகழ்ச்சியை TRRAIN நிறுவனர் பி.எஸ். நாகேஷ், மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அசுதோஷ் பாண்டே ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.