நீதிபதியின் நாக்கை வெட்டுவேன் என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவருக்கு ராஜீவ் சந்திரசேகர் கண்டனம்!!
சட்டபூர்வ முடிவுகளை எதிர்த்து நாக்குகளை வெட்டுவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்ல. ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நாக்கை வெட்டுவேன் என்று திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் பேசி இருந்ததை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ''இது தற்போதைய காங் கட்சியின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. சிறந்த அரசியல் தலைவர்களைக் கொண்ட நாளிலிருந்து தற்போதைய காங்கிரஸ் நீண்ட தொலைவிற்கு விலகிச் சென்றுள்ளது. காங்கிரஸ் தற்போது தரம் குறைந்த அரசியல்வாதிகளால் நிறைந்துள்ளது. ராகுல் காந்தியின் கீழ் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் யார்? அல்லது 5 வெளிநாட்டு பயணங்களின் பொய்யர்கள் யார்?
இந்தக் கட்சியின் வெட்கம் இல்லாத அந்த ஜோக்கர்தான் வெளிநாடுகள் பற்றி உளறி வருகிறார். இந்திய ஜனநாயகத்தை அரசு காப்பாற்றி வருகிறது. அதேசமயம் நாட்டின் நீதிபதியின் நாக்கை அறுப்பேன் என பேசி இருப்பது வெட்கக்கேடானது.
சட்டபூர்வ முடிவுகளை விரும்பாதபோது நாக்குகளை வெட்டுவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்ல. அங்குதான் சட்டங்கள் தங்களுக்கு சாதகமாக இல்லாதபோது இதுமாதிரி மிரட்டல்களை விடுப்பார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதியின் நாக்கை அறுப்பதாக கூறிய காங் மாவட்ட தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சியின் எஸ்சிஎஸ்டி பிரிவு சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேசும்போது, ''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன்'' என்று பேசி இருந்தார், இது தற்போது அதிர்ச்சியை மட்டுமின்றி, பெரிய அளவில் எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதனையடுத்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.