இந்தியாவில் தவறான தகவல் இல்லாத இணையத்தை உருவாக்குவதே நோக்கம்: சீதாராம் யெச்சூரிக்கு ராஜீவ் சந்திரசேகர் பதில்!!
இந்தியாவில் தவறான தகவல் இல்லாத இணையத்தை உருவாக்குவது குறித்து நீங்கள் தவறாக சித்தரித்தாலும், பொய் சொல்ல முயற்சித்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்று சீதாராம் யெச்சூரிக்கு மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யும் அதிகாரத்தை பத்திரிகை தகவல் ஆணையத்திற்கு வழங்குவது கொடூரமானது, ஜனநாயக விரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தணிக்கை மற்றும் ஜனநாயகம் இணைந்து இருக்க முடியாது.
ஐடி விதிகளில் இந்த திருத்தங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.
அதற்கு டுவிட்டரில் பதில் அளித்து இருக்கும் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ''இந்த ட்வீட் வேண்டுமென்றே தவறான தகவல் அல்லது அறியாமையால் முகமூடி அணிந்து உண்மைகளை மறைத்து பதியப்பட்டுள்ளது.
* அதிகார ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை. அது "கடுமையானதும்" அல்ல.
*ஐடி விதிகள் ஏற்கனவே அக்டோபர் 2022 முதல் தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்களை ஐடி சட்டப் பிரிவு 79 இன் கீழ் தண்டிக்கலாம் என்று கூறுகிறது. சில குறிப்பிட்ட செய்திகளை பகிரக் கூடாது என்று கட்டுப்படுத்துகிறது.
* அனைத்து அரசு சார்ந்த செய்திகளையும் பேக்ட்செக் மூலம் சரிபார்க்க சமூக ஊடக ஆய்வாளர்கள் நிறுவப்படுவார்கள். அவர்கள் செய்திகளை சரிபார்ப்பார்கள்.
* அந்த ஆய்வாளர்கள் தொடர்ந்து அந்த செய்தியை எடுத்துச் செல்லலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து முடிவு செய்வார்கள்
அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்தியாவில் தவறான தகவல் இல்லாத இணையத்தை உருவாக்குவது குறித்து நீங்கள் தவறாக சித்தரித்தாலும், பொய் சொல்ல முயற்சித்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இளம் காட்டூன் கலைஞர்களும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்ட காரணத்தினால் செக்ஷன் 66Aன் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.