கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியது எல்லாம் பொய் என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் மக்களின் உயிர்களை திமுக அரசு காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். அதாவது கரூர் சம்பவத்துக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, நள்ளிரவு 1 மணிக்கு பிரேதப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏன்?

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்

மூன்று மேசைகளில் 39 பேர் உடலுக்கு எப்படி இவ்வளவு வேகமாக உடற்கூறு ஆய்வு செய்ய முடியும்? கரூர் ரவுண்டானா பகுதியில் பேச எதிர்க்கட்சியினருக்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி, இபிஎஸ் பேசுவதெல்லாம் பொய் என கடுமையாக சாடியுள்ளார்.

அமைச்சர் ரகுபதி பதிலடி

இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக இன்று முழுக்க முழுக்க பொய்களையே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி. இது திட்டமிட்ட சதியாக இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் தான் அப்படி நினைக்கிறார்.

பிரேத பரிசோதனைக்கு 8 டேபிள்கள்

41 உயிர்கள் போய்விட்டன என்று அறிந்தவுடன் கதறி துடித்து மனிதாபிமானத்துடன் உடனடியாக கரூர் சென்று இரவோடு இரவாக பிரேத பரிசோதனை செய்து உடல்களை ஒப்படைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக நின்றது திராவிட மாடல் அரசு. பிரேத பரிசோதனைக்கு 3 டேபிள்கள் போடப்பட்டு இருந்ததாக இபிஎஸ் சொல்கிறார். அங்கு 8 டேபிள்கள் போடப்பட்டு இருந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரிடமே இதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உயிர்களை காப்பாற்றிய திமுக அரசு

பல மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய அங்கு வந்தனர். பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்ததால் தான் ஏராளமான மக்களை காப்பாற்ற முடிந்தது. இரவு இரவோக துரித நடவடிக்கை எடுத்து ஏராளமான உயிர்களை திமுக அரசு காப்பாற்றியுள்ளது.

இபிஎஸ்ஸின் கேவலமான அரசியல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக மாநாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை கொடுத்தோம். ஆனால் அதில் திமுக ஸ்டிக்கர் ஒட்டியதாக இபிஎஸ் கேவலமான அரசியல் செய்கிறார். இரவோடு இரவாக யாராவது ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா? இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், முதல்வர் செய்த சாதனையால் திராவிட மாடல் 2.0 தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும்'' என்று தெரிவித்தார்.