மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சென்னையில் புதிய மேம்பாலத் திட்டம் மற்றும் நாடு முழுவதும் சாலைகள் அமைக்க புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். 

Road construction from municipal waste : ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் கட்டமைப்பை பொறுத்து வளர்ந்த நாடாக கருதப்படும். அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில வருடங்களில் சாலை திட்டங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது. பல மணி நேரம் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்த காலத்தில் செல்லும் வகையில் பல மாநிலங்களில் சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சாலைகள் அமைப்பதில் புது வித டெக்னாலஜி மூலம் செயல்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறது.

மதுரவாயல் - 8 கி.மீட்டர் பறக்கும் பாலம்

இது தொடர்பான சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், சென்னையில் மதுரவாயல் சந்திப்பை சென்னை வெளிவட்டச் சாலை உடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 8.14 கி.மீ நீளமுள்ள ஆறு வழி மேம்பாலச் சாலை அமைப்பதற்கான டெண்டர்களை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என தெரிவித்தார். 8.14 கி.மீ தூரமுள்ள இந்த மேம்பாலத் திட்டத்திற்கு தோராயமாக 1,476.8 ரூபாய் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என கூறினார்.

நகராட்சி கழிவுகளில் சாலை 

மேலும் தற்போது சாலைகள் அமைக்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய அவர், 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகளில் ஒட்டுமொத்த நகராட்சி கழிவுகளையும் பயன்படுத்தி சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறினார். 

மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் 40 லட்சம் டன் கழிவுகளும், அகமதாபாத்-புனே நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 25 லட்சம் டன்னும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் கால்நடைகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ பிட்யூமன் பயன்படுத்தி ஒரு சாலை அமைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் நிதின் கட்காரி இது பெட்ரோலிய பிட்யூமனுடன் ஒப்பிடுகையில் சிறந்தது என மத்திய ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.