அடுத்த 3 மணி நேரம் டேஞ்சர்! இந்த 8 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடப்போகுதாம் மழை!
Tamilnadu Rain: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்பதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக அனைத்து மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளும் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கனமழை பெய்தாலே பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு பகுதியில் 15 செ.மீ. கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
8 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.