Asianet News TamilAsianet News Tamil

வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம்... பயன்பெறுவது எப்படி? வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!!

வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டத்தினை பிரபலப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 

minister mrk panneerselvam explains about scheme to use machinery for agriculture
Author
First Published Nov 18, 2022, 5:20 PM IST

வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டத்தினை பிரபலப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாகுபடிக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காத நிலையில், விவசாயிகள் உரிய காலத்தில் சாகுபடிப் பணிகளை மேற்கொள்வதற்காக, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பு 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம், இளைஞர்களை விவசாய தொழிலில் ஈர்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோர்கள், பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ மானியம் போன்ற வகைகளில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை தமிழகத்தில், 2022-23 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி ஒன்றிய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பிவிட்டது..! ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும்- செல்லூர் ராஜூ

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்:

இந்த திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும் வேளாண் இயந்திரங்கள் விநியோகம் செய்யப்படும். அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.5 இலட்சம், மினி டிராக்டருக்கு ரூ.2.25 இலட்சம், பவர்டில்லருக்கு ரூ.85,000/-, நெல் நடவு இயந்திரத்திற்கு ரூ.5 இலட்சம், களையெடுக்கும் இயந்திரத்திற்கு ரூ.63,000/- சுழல் கலப்பைக்கு ரூ.44,800/-, விதைப்புக் கருவிக்கு ரூ.24,100/-, நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூ.75,000/-, கொத்துக் கலப்பைக்கு ரூ.50,000/-, நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.11 இலட்சம். பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரத்திற்கு ரூ.2.50 இலட்சம், கரும்பு சோகையை துகளாக்கும் கருவிக்கு ரூ.1.25 இலட்சம், தென்னை ஓலைகளை துகளாக்கும் கருவிக்கு ரூ.63,000/-, வைக்கோல் கட்டும் கருவிக்கு ரூ.2.25 இலட்சம், கரும்பு சோகை உரிக்கும் கருவிக்கு ரூ.75,000/-, புதர் அகற்றும் கருவிக்கு ரூ.30,000/-, தட்டை வெட்டும் கருவிக்கு ரூ.20,000/- மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக, 1615 வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்:

ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன், கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். இதனால், இப்பிரிவினைச் சார்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை வெகுவாக குறையும். இதற்கான மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.

விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் இயந்திரத்திற்கு மானியம்:

விவசாயிகள் உற்பத்தி செய்த சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு சிறுதானிய சுத்திகரிப்பு, பயறு உடைத்தல், எண்ணெய் பிழிதல் போன்ற வகைகளில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடியில் வேலை..! முழு விவரம் இதோ...

சூரிய கூடார உலர்த்தி நிறுவ மானியம்:

இயற்கையில் அதிகமாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலைக் கொண்டு, கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை, முருங்கை இலை போன்ற வேளாண் விளைபொருட்களை சுகாதாரமான முறையில் சீராக உலர்த்தி, விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிட தனிப்பட்ட விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு 40 சதவீத மானியத்தில், 400 முதல் 1000 சதுர அடி வரை பாலிகார்பனேட் தகடுகளுடன் கூடிய சூரிய கூடார உலர்த்தியை நிறுவுவதற்கு, 40 சதவிகித மானியம் வழங்கப்படும்.
வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானியம்    சிறு, குறு விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்து, வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு, 40 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ மானியம்

வேளாண் இயந்திர சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்து, பதிவு செய்த விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவைப்படும் சிறிய அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்களை ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கி கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைப்பதற்கு 80 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் வழங்கப்படும். 

கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம்  நிறுவ ரூ.60 இலட்சம் மானியம்:

அதிக வேலையாட்கள் தேவைப்படும் கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.60 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இதையும் படிங்க: தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! 17 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம்

பங்களிப்புத் தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன் கடன் வசதி:

வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க முன்வரும் விவசாயக் குழுக்களுக்கு, மானியம் போக மீதமுள்ள பங்களிப்புத் தொகையை செலுத்துவதற்கு, வங்கியின் மூலம் கடன் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பெறும் கடனுக்கு, வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் (Agriculture Infrastructure Fund)  கீழ் மூன்று சதவிகித வட்டி மானியம் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது https;//aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ  விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் அட்டையின் நகல் 
  • புகைப்படம் 
  • சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல்
  • ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்

கிராமங்களில் சாகுபடிப் பணிகளுக்கு போதிய வேலையாட்கள் கிடைக்காமல் அவதியுறும் வேளாண் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios