பாஜகவுக்கு அச்சப்படும் கோழை பழனிசாமி- கே.என் நேரு!!
அதிமுக பொதுக்குழுவில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் மட்டுமே தெரிவிக்கப்பட்டு, திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது பாஜகவுடன் அதிமுக வைத்திருக்கும் கள்ளக் கூட்டணியை நிரூபிக்கிறது என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் திமுகவிற்கு எதிராக கண்டங்களை தெரிவித்த நிலையில் பாஜக அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என கூறியிருப்பதாக திமுக விமர்சித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக-வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி ’கோழைசாமி’ பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்! இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.
புலிப்பாண்டியென அழுத்தம் கொடுக்கும் பழனிசாமி அவர்களே…
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.
* நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.
* அம்மையார் ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.
* முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.
* முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.
* நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
* ’நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள்.
* மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.
இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார்.
பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறாரா?
“அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்” என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என அமைச்சர் கேஎன் நேரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.