கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள்- துரைமுருகன்
கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2000, 3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பந்த்- துரைமுருகன் விளக்கம்
தமிழகத்தில் காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், பெங்களூரில் நடைபெற்று வரும் பந்த் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், கர்நாடகமாநிலத்தில் பந்த் நடைபெறுவது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என நடத்த ஆரம்பித்தால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்ககூடிய தனித்தன்மை அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவுத்தன்மை பெற்றவர்கள் உணர வேண்டும்.
நமக்கு தரவேண்டிய தண்ணீர் தருகிறார்கள்
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நாளையோடு 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும் நமக்கு தரப்படுகிற தண்ணீர் தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் 2000,3000 கன அடிகள் வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7000 கன அடி வந்து கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி இன்னும் 11000 கன அடி தண்ணீர் நமக்கு வர வேண்டி உள்ளது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என நான் எதிர்பார்ப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்