"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறையுது" - பதில் தாக்குதல் நடத்திய துரைமுருகன்!
Durai Murugan : மூத்த அரசியல் தலைவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்து பேசியுள்ளார்.
நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், "கலைஞர் எனும் தாய்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் ஏ.வா வேலு எழுதிய இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். புத்தக வெளியீட்டு விழாவை தொடர்ந்து அரங்கில் வீற்றிருந்த அறிஞர் பெருமக்கள் பலரும் பேச தொடங்கினர்.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசத் தொடங்கினார், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து பல விஷயங்களை எடுத்துரைத்தார். தமிழகம், இந்தியா என்று மட்டுமல்லாமல், உலக அளவில் ஒரு அரசியல் தலைவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறினார்.
கலைஞர் நூற்றாண்டு விழா.. நினைவு நாணயம் பெற்றுக்கொண்ட கமல் - ஸ்டாலினுக்கு புகழாரம்!
மேலும் இனி இப்படி ஒரு விழாவை கொண்டாடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று பேசினார். திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து பல விஷயங்களை பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு ஆசிரியராக மு.க ஸ்டாலின், திமுகவில் உள்ள புதியவர்களை மிக எளிதாக சமாளித்து விடுகிறார். ஆனால் இங்கு இருக்கும் பழைய மாணவர்களை அவர் சமாளிப்பது தான் உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்று கூறினார்.
அது மட்டும் அல்லாமல் மூத்த அமைச்சர் துரை முருகனை நேரடியாகவே கிண்டல் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடிய அளவிற்கு மிகப்பெரிய ஜாம்பவான் என்று பேசியிருந்தார். நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பேச்சுதான் தலைப்புச் செய்தியாக மாறியது.
இந்த சூழலில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது, ரஜினியின் அந்த கலகலப்பான பேச்சு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், "சினிமாவில் இப்பொழுது மிகவும் வயதான, பல்லு போன நடிகர்கள் எல்லாம் நடித்து வருகிறார்கள். அவர்களால் தான் புதிதாக வரும் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை" என்று கூறி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.
அழகி போட்டிகளில் கூடவா சாதி பார்க்கணும்? ராகுல் காந்தியை விளாசிய சரத்குமார்!