Aavin Milk : அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 70 கிராம் ஆட்டைய போட்ட ஆவின்..கொதிக்கும் பால் முகவர்கள்
அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டில் 450கிராம் எடையளவு கொண்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆவின் பாலில் திருட்டு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் இன்றியமையாத பொருளாக உள்ளது. இந்தநிலையில் ஆவின் பாலில் எடையானது குறைத்து விற்பனை செய்யப்படுவதாக பால் முகவர்கள் ஆதாரத்தோடு குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று (02.01.2024) அதிகாலையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் கொண்ட பால் முகவர் ஒருவர்,
ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை
தான் கொள்முதல் செய்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் (180லிட்டர்) ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்ததில் 518 முதல் 520கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் 448, 449, 450கிராம் என சுமார் 70கிராம் வரை மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த சூழலில் எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவது என்பது பால் பண்ணையில் உள்ள தரக்கட்டுப்பாடு, மேற்பார்வை அதிகாரிகள், பால் பண்ணை பொதுமேலாளர் (DGM), உதவி பொது மேலாளர் (AGM, Marketing), Control Room அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது தொடர்ந்து எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விநியோகம் செய்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது உறுதியாகிறது.
9400 லிட்டர் பால் மாயம்
ஏற்கனவே கடந்தாண்டு வேலூர், சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இதே போன்று 450கிராம், 470கிராம் என எடையளவு மிகவும் குறைவான நிலையில் இருந்ததும், அவ்வாறு எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து, விநியோகம் செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அது மீண்டும் தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமின்றி மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது அதனை ஈடுசெய்ய சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 25ஆயிரம் லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் சுமார் 9400லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் மாயமான நிலையில் அதற்கு பொறுப்பாளரான உதவிப் பொது மேலாளர் (AGM, Marketing) சிவக்குமார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடுமையான நடவடிக்கை எடுங்கள்
இந்த சூழலில் தான் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் மீண்டும் மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை காணும் போது இது சாதாரணமாகவோ அல்லது யதேச்சையாகவோ நடந்தது போல் இல்லாமல், பால் பாக்கெட்டில் எடையளவு குறைவாக பேக்கிங் செய்து விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள்..? என்கிற தைரியத்தில் திட்டமிட்டு செய்தது போல் தெரிகிறது.
எனவே தற்போது எடையளவு குறைவான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல் முறையான விசாரணைக்கு உட்படுத்தி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும், குறிப்பாக DGM, AGM, Marketing அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக பால் முகவர்கள் சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
பெருங்களத்தூர் மெயின் ரோட்டில் மீண்டும் முதலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்-வெளியான வீடியோ