தமிழகத்தின் முக்கிய அணைகளுள் ஒன்றான மேட்டூர் அணைக்கு நீர் வரத்து என்பது கர்நாடகா மாநிலத்தின் மழைப்பொழிவை நம்பியே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது.

அங்கு தொடர்ச்சியான மழைப்பொழிவு, நீர் வரத்து இருந்ததால் கடந்த செப். 7ம் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் முதன்முதலாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன்பிறகு டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைந்தது. 

நீர் வரத்து சரிந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் சரியத்தொடங்கியது. என்றாலும் அடுத்த சில நாள்களில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் செப். 24ம் தேதி இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

அதன்பிறகும் நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது. கடந்த அக். 17ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 113.03 அடியாக சரிந்தது. அன்று நீர் வரத்து வினாடிக்கு 8347 அடியாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியதால், நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து  காலை முதல் அணையில் இருந்து உபரி நீர் பவர் ஹவுஸ் வழியாக 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 5000 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.