பிரமலதா குற்றச்சாட்டு: மாணிக்கம் தாகூர் பதிலடி - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

Manickam Tagore response to premalatha vijayakanth allegations Satyabrata Sahoo explain smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு  மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெற்ற நிலையில், தர்மபுரி, விருதுநகரில் மட்டும் இழுபறி நிலவியது. குறிப்பாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கடைசி வரை இழுபறி நீடித்தது. அங்கு அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளரும், விஜயகாந்த் மகனுமான விஜயபிரபாகரன் மற்றும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக குறைவான வாக்கு வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். விஜயபிரபாகரன் இரண்டாமிடம் பிடித்தார்.

இந்த நிலையில், விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளரும், அவரது தாயாருமான பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். விருதுநகரில் விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

வாக்கு எண்ணிக்கையை 2 மணி நேரம் நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பிய பிரேமலதா, மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு!

ஆனால், பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டுகளுக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரேமலதா பொய் குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. “நேர்மையான அதிகாரிகள் மீது தவறான குற்றச்சாட்டை வைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில்தான் இருந்தனர். முறைகேடு என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே?” என மாணிக்க தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 2மணி நேரம் நிறுத்தப்பட்டது என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே? இரவு 7 மணிக்குப் பிறகு தோல்வியை ஒப்புக்கொண்டு சென்ற தேமுதிகவினர் இப்போது குற்றச்சாட்டு கூறுவது ஏன்? பிரேமலதாவின் சாதி அரசியல் தோல்வியடைந்திருக்கிறது. தோற்றதற்கு பின் புலம்பக் கூடாது. பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை  தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு இதுவரை புகார் எதுவும் வரவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios