பிரதமராக நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி பதவியேற்பு!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர் நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதியன்று பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது. ஆனால், இந்த முறை கூட்டணி ஆட்சி அமையவுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தில் அக்கூட்டணி கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தனது பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
“மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் குழு ஆட்சியை தொடருமாறு கேட்டுக் கொண்டார்.” என இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்த வச்சுட்டாரு குமாரு: மோடிக்கு முதல் செக் வைக்கும் நிதிஷ் குமார்!
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர் நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதியன்று பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பிரதமராக மோடி வருகிற 8ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 9ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, பாதுகாப்பு, உள்துறை, நிதித்துறை, சபாநாயகர் போன்ற முக்கியத் துறைகளையும், பதவிகளையும் கூட்டணி கட்சிகள் கேட்டு பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.