பத்த வச்சுட்டாரு குமாரு: மோடிக்கு முதல் செக் வைக்கும் நிதிஷ் குமார்!
நாடு முழுவதும் குறிப்பாக பீகாரில் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஐக்கிய ஜனதாதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியே மத்தியில் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர்.
இந்த இரண்டு கட்சிகளையும் இந்தியா கூட்டனிக்கு அழைப்பு விடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருமே பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்திலும் அவர்கள் இருவரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி வருகிற 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நாடு முழுவதும் குறிப்பாக பீகாரில் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் சில திட்டங்களை மறுபரிசீலனை செய்ய பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சில திட்டங்களை பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்தனர். குறிப்பாக, அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக பீகாரில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இந்த பின்னணியில், இந்த திட்டங்களை கொண்டு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தால் அது தங்களது மாநிலங்களில் தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதி சில திட்டங்களை ரத்து செய்ய ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசிய ஆகிய இருகட்சிகளுமே பாஜகவை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
அந்த வகையில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக தங்களக்கு எந்த பிரச்சினையும் என தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதாதளம், அது பற்றி ஆலோசனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேசமயம், சில வட மாநிலங்களில் பாஜகவின் தோல்விக்கு காரணமான அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதாதளம் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், “வாக்காளர்களில் பலர் அக்னிவீர் திட்டத்தால் வருத்தம் அடைந்துள்ளனர். பொதுமக்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அவை நீக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது. பொது சிவில் சட்டம் குறித்து முதல்வர் நிதிஷ்குமார் ஏற்கனவே சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.