பீகாரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி கிருஷ்ணகிரிக்கு வந்த கணவர், மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார். வாக்குவாதத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து மாந்தோப்பில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜா சுகன்(30). இவரது மனைவி கிரண்(27). இவர்களது வீட்டருகே வசித்து வந்தவர் முகேஷ்(30). இவருக்கும் கிரணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 4 நாட்களுக்கு முன், முகேஷ் கிரண் மற்றும் அவரது 2 குழந்தைகளை, பீகாரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வேலம்பட்டிக்கு வந்துள்ளனர். அங்கு சக்திவேல் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில், கணவன், மனைவி என்று கூறி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளைப் பார்க்க ராஜா சுகன், பீகாரில் இருந்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, மனைவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ராஜா சுகன், வேலம்பட்டிக்கு வந்தார். அங்கு, தனது மனைவி கிரண், முகேசுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அன்றிரவு கிரண் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மில்லில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்நிலையில் ஆலையின் அருகே உள்ள மாந்தோப்பில் ராஜா சுகன், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் சக தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் ராஜா சுகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் தப்பிக்க முயன்ற முகேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பீகாரில் இருந்த போதே கிரணுக்கும், முகேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும், அங்கு சரியான வேலை இல்லாததால், அங்கிருந்து கிரணும், முகேசும் குழந்தைகளுடன் வேலம்பட்டிக்கு வந்து, சக்திவேலின் அரிசி ஆலையில் பணியில் சேர்ந்துள்ளனர்.
பின்னர், மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அவரது கணவர் ராஜா சுகன், வேலப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு இருவரையும் ஒன்றாக கண்ட ராஜா சுகன், முகேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முகேஷ், ராஜா சுகனை கழுத்தை இறுக்கி கொலை செய்து, மாந்தோப்பில் வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 குழந்தைகளுடன் தப்பித்த கிரணை போலீசார் தேடி வருகின்றனர்.
