மதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மல்லை சத்யா பிற மதிமுக முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து திராவிட வெற்றி கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஆல் இன் ஆல் என அறியப்பட்ட மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோ இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரிடையே பிளவு ஏற்பட்டது. அப்போது பொதுச் செயலாளர் வைகோ இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.

ஆனால் இருவர் இடையேயான மோதல் தொடர்ந்து முற்றவே வைகோ, துரைவைகோவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்த மல்லை சத்யா கட்சிக்குள் தனித்து செயல்படத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து மல்லை சத்யாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். பின்னர் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக வைகோ, துரை வைகோவின் செயல்பாடுகள் தொடர்பாகவும், அவர்கள் வசம் உள்ள சொத்து தொடர்பாகவும் அடுத்தடுத்த கருத்துகளை தெரிவித்து மல்லை சத்யா பகீர் கிளப்பினார்.

இந்நிலையில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிட வெற்றி கழகம் (DVK) என்ற புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார். இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் உட்பட மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.