ஆலகால விஷத்தைக் கக்கும் நஞ்சுப் பாம்பு மல்லை சத்யா: வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் மகன் துரை வைகோ மீது ரூ.250 கோடி சொத்து குற்றச்சாட்டு வைத்த மல்லை சத்யாவை 'ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு' என விமர்சித்துள்ளார். அவர் சொல்வது 'ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்' என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ரூ.250 கோடிக்கு சொத்து உள்ளதாகக் கூறி, சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்த மல்லை சத்யாவுக்கு, வைகோ கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யாவை "ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு" என்று ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்
வைகோ தனது நேர்மையைப் பற்றிப் பேசுகையில், "எனது நேர்மையை உலகு அறியும். என் அரசியல் விரோதிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், மல்லை சத்யாவுக்கு முன்னால் கோயபல்ஸ்கூட கடுகு போல சிறுத்துப் போய்விடுவான் என்றும் அவர் காட்டமாகக் கூறினார்.
மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு
மல்லை சத்யா வைகோ குடும்பத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்குச் சொத்து இருக்கிறது என்றும் ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வைகோ வாங்கினார் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை வைகோ கட்டியுள்ளார். அந்த அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக ரகசியமாகப் புதுமனை புகு விழா நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் வைகோவின் உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார் என்றும் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.