நடிகர் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வை விமர்சிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) ஆதரவு கிடைக்காததால், அ.தி.மு.க. குறித்து டி.டி.வி. தினகரன் விமர்சிப்பதாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும் அவர் திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
மதுரை மாவட்டம் விளாங்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:
தினகரன் விமர்சனத்துக்கு பதில்
"சமீபத்தில் ஒரு நிகழ்வில் விஜய் வந்தபோது, 'எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் விஜய்க்காக முதலில் குரல் கொடுத்தவர், அதனால்தான் நாங்கள் எங்கள் கட்சிக்கொடியைக் காட்டினோம்' என்று த.வெ.க. தொண்டர்கள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை விஜய் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் கட்சிக் கொடியைத் தன்னெழுச்சியாகக் காட்டுகிறார்கள்.
'தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால், அந்தப் பழம் புளிக்கும்' என்று சொல்வார்கள். அதுபோலத்தான், விஜய்யின் ஆதரவு கிடைக்காததால்தான் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. குறித்து விமர்சித்து வருகிறார்.
இபிஎஸ் சொல்பவரைக் கும்பிடுவோம்!
எங்கள் கட்சி தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்கள் யாராவது அடுத்த கட்சிக்கொடியைத் தூக்கியதாக என்றாவது வரலாறு உண்டா? எங்களுடைய பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) யாரை 'சாமி' என்று சொல்கிறாரோ, அவரை நாங்கள் கும்பிடுவோம். கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் தூக்கி கொண்டாடுவோம். இதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
திருமாவளவன் மீதான விமர்சனம்
விஜய் தனது கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று திருமாவளவன் அறிவுரை சொல்கிறார். ஆனால், திருமாவளவன் தனது கட்சியில் உள்ள வன்முறை இயக்கத்தோடு சேர்ந்துவிட்ட தொண்டர்களை, நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) சேர்ந்த இடம் தி.மு.க. என்பதால், அவர்களும் அப்படித்தான் இருப்பார்கள்.
எம்.ஜி.ஆர். ஒப்பற்ற தலைவர்
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் ஒரு கெத்து. அவருக்கு இணையாக யாரும் கிடையாது. சினிமாவிலும், அரசியலிலும் கொடி நாட்டியவர் எம்.ஜி.ஆர். அவருடன் வேறு எந்தத் தலைவரையும் ஒப்பிட முடியாது," என்று செல்லூர் ராஜூ பேசினார்.
