மதுரை மாவட்டம் அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேங்கைவயல் போன்று மீண்டும் மர்ம நபர்கள் கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்று தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

இந்நிலையில், வேங்கைவயல் போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் உள்ள அமச்சியாபுரம் என்ற கிராமத்தில் தான் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.

பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டியை பார்த்தபோது அதில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்

இது தொடர்பாக மக்கள் ஊராட்சி செயலரிடம் புகார் கொடுத்தும் உடனடியாக எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் தொட்டியையும் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. மனித கழிவுகள் கலக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அமச்சியாபுரம் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மக்களின் கடுமையான அழுத்ததுக்கு பிறகே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும், அந்த குடிநீரின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

பட்டியலின மக்கள் மீது தொடர் தாக்குதல்

குடிநீர் தொட்டில் மலத்தை கலந்த மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வாழும் கிராமங்களை குறிவைத்து இப்படிப்பட்ட கேவலமான செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

வேங்கைவயல் சம்பவத்திலேயே தமிழக அரசு கண்துடைப்புக்காக இல்லாமல் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி இருந்தால் பட்டியலின மக்களின் மீதான இத்தகைய கொடூரமான தாக்குதல் தொடர்ந்திருக்காது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.