TM Krishna : சங்கீத கலாநிதி விருது விவகாரம் : டி. எம் கிருஷ்ணாவுக்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு..
சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ள டி.எம், கிருஷ்ணாவுக்கு கர்நாடக இசை கலைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில்திமுக எம்.பி கனிமொழி, டி.எம்.கிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கர்நாடகா இசை பாடகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக சங்கீத கலாநிதி விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீக கலாநிதி விருது கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள 98-வது மார்கழி நிகழ்வில் டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டி.எம் கிருஷ்ணாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
சங்கீதம் அனைவருக்கும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் கர்நாடக் இசை வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார் டி.எம். கிருஷ்ணா. மேடைகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி வந்த கர்நாடக சங்கீததத்தை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மார்கழி கச்சேரிகளுக்கு பதில், ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை முன்னெடுத்தவர்.
இந்து பக்தி பாடல்களே அதிகமாக பாடப்படும் கர்நாடக சங்கீதத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் பல பாடல்களை பாடி உள்ளார். அமைதியை வலியுறுத்தும் வகையில் குல்லா அணிந்து கொண்டு கர்நாடக இசை மேடையில் பாடல்கள் பாடுவது, கேரள மறுமலர்ச்சியின் தந்தை என போற்றப்படும் நாராயண குரு குறித்த பாடல், சாமானியர்கள் பயணம் செய்யும் ரயில்களில் பாடல் பாடுவது, சென்னையில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கர்நாடக இசை ராகத்தை பயன்படுத்தி இஸ்லாமிய பாடல் பாடியது என பல பாடல்களின் மூலமே பல முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் தற்போது டி.எம். கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து கர்நாடக இசை கலைஞர்கள் விமர்சித்துள்ளனர். அந்த வகையில் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சினி, காயத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் “ பெரியாரை போற்றும் கருத்துகளை டி.எம். கிருஷ்ணா பேசி உள்ளார். பிராமணர்கள் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்று பிராமண சமூகத்தின் பெண்களை ததாத வார்த்தைகளால் இழிவுப்படுத்தி பேசிய பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றோரை ஊக்குவிப்பது ஆபத்தானது. எனவே இந்த விழாவில் கலந்து கொண்டால் அது நம் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்..” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஞ்சினி, காயத்ரியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், டி. எம். கிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி, டி.எம்.கிருஷ்ணாவிற்கு ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “மியூசிக் அகாடமி டிஎம்கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவதாக அறிவித்திருப்பது இசை சகோதரத்துவத்தின் சில பகுதிகளை உலுக்கி உள்ளது.
டி.எம் கிருஷ்ணாவின் சமூக நம்பிக்கைகள் அல்லது பெரியாருடனான அவரது ஈடுபாடு ஆகியவற்றால் அவர் வெறுப்பையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறார். பெரியாரின் கருத்துகளை படித்தால், அவர் உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் என்பதை நமக்கு புரியும். அவர் ஒருபோதும் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததில்லை.
இந்த வெறுப்பு, சமீபத்தில் கர்நாடகாவில் பாஜக அரசியல்வாதி பேசிய வெறுப்பு நிறைந்த பேச்சைப் போன்றது. நம் நாடு நம்பும் கருத்துச் சுதந்திரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.