மதுரை அழகர் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. கோயிலின் தொன்மை மற்றும் வரலாற்றுச் சிறப்பு பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை அழகர் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், புதிய கட்டுமானப் பணிகளால் கோயிலின் தொன்மை மற்றும் வரலாற்றுச் சிறப்பு பாதிக்கப்படுவதாகவும் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
கட்டுமானப் பணிகளுக்குத் தடை
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அழகர் கோயிலில் புதிதாக எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கோயிலின் பழமையைப் பாதுகாக்கக் கோரிய பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
வணிகக் கட்டிடங்களுக்குத் தடை
ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் மதுரை அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உபரி நிதியைக் கொண்டு கடைகள் போன்ற வணிகக் கட்டிடங்களை அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில், அழகர் கோவில் வனப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
