ஜெயலலிதா மரண வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது.
இதையடுத்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், ஓபிஎஸ், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தது. இந்த அறிக்கை சட்டமன்றத்திலும் சமர்ப்பிக்கபப்ட்டுள்ளது.
அதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்; ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்து திருமண சடங்குகளை விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்: வைரலாகும் பழைய வீடியோ!
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஆறுமுகசாமி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டுள்ளது.