தமிழ்நாட்டை யாரும் சூறையாட முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில உரிமையை பாதுகாக்க எனது பயணம் தொடரும் என்று கூறியுள்ளார். 

M.K. Stalin says no one can plunder Tamil Nadu: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், உள்துறை மானியக் கோரிக்கையில் பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்ததை விட கடந்த 4 ஆண்டுகளில் 1000 மடங்கு சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது. அடமானம் வைக்கவும், அபகரிக்கவும் முயற்சிப்பவர்களால் தமிழ்நாட்டை யாரும் சூறையாட முடியாது'' என்று தெரிவித்தார்.

மேலே பாம்புகள், கீழே நரிகள்

தொடர்ந்து திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நீங்கள் இதுவரை பார்த்தது பார்ட் ஒன் தான். 2026ல் திராவிட மாடல் அரசின் 2.0 லோடிங். ஒன்றிய அரசு, ஆளுநர் என பல தடைகளை கடந்து தான் சாதனைகளை படைத்து வருகிறோம். மேலே பாம்புகள், கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் என எண்ணற்ற தடைகளை தாண்டி செயல்பட்டு வருகிறோம். '' என்றார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! பேரவையில் நடந்தது என்ன?

சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது

தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிலர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் மத, ஜாதி கலவரங்களை உருவாக்க பார்க்கிறார்க்ள். ஆனால் தமிழக மக்கள் அதனை முறியடித்து வருகின்றனர். இதெல்லாம் நடந்திருந்தால்தான், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரி தூற்ற முடியும்? மொத்தத்தில், சட்டம் – ஒழுங்கில் கல் விழாதா என்று துடிப்பவர்கள் ஆசையில்தான் மண் தான் விழுந்திருக்கிறது'' என்றார். 

என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைப்பவன் அல்ல‌

தொடர்ந்து நீண்ட நேரம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''திராவிட மாடல் அரசு படைத்த சாதனைகள் அனைத்தும் என்னுடைய அமைச்சரவை, அதிகாரிகள் - அவர்களுடைய கூட்டு உழைப்பிற்குக் கிடைத்த பலன். எல்லாவற்றிலும் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவன் இல்லை நான். இது ஒரு கட்சியினுடைய அரசு அல்ல. ஒரு கொள்கையினுடைய அரசு என்று நான் குறிப்பிட்டேன். இதுவரை இருந்த அரசுகளை காமராசர் அரசு – அண்ணா அரசு – கலைஞர் அரசு – எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்வது வழக்கம். அந்த வரிசையில் இதனை ஸ்டாலின் அரசு என்று சொல்லிக் கொள்ளாமல், திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு 

எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொன்னார், தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது யாருடைய வேட்டைகாடாகவும் இருந்திட ஒருநாளும் ஒப்புக் கொள்ள மாட்டோம். சுயாட்சி என்பது எங்கள் பிறப்புரிமை. அதனை தடுக்கவோ, தகர்க்கவோ எவருக்கும் உரிமையில்லை. இது எங்கள் போர் முழக்கம் என்று பேரறிஞர் அண்ணா முழங்கினார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் சட்டமன்றத்தில் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். 

தமிழ்நாடு வரலாறு படைக்கும்

அடுத்தப்படியாக மாநில சுயாட்சி கனவையும் நிறைவேற்ற குழு அமைத்திருக்கிறோம். நான் தொடங்கியுள்ள இந்த பயணம் நீண்டது. முதலமைச்சராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன், என் பயணம் தொடரும். தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும். தமிழ்நாடு வரலாறு படைக்கும். வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு'' என்று பேசி முடித்தார்.

7 அமைச்சர்கள் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! முதல்வருக்கு தலைவலி! லிஸ்ட் போட்ட அதிமுக!