7 திமுக அமைச்சர்கள் பல்வேறு வழக்கில் சிக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் முழு லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.

ADMK stated 7 DMK ministers involved in various cases: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 27 அன்று தனது அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை நீக்கினார். ஒருவர் பொன்முடி. மற்றொருவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜாமீனா? அல்லது அமைச்சர் பதவியா? என நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்ததால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

பொன்முடி, செந்தில் பாலாஜி பதவி நீக்கம்

பொன்முடியை பொறுத்தவரை பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து அருவருப்பான கருத்துகளை தெரிவித்தார். பொன்முடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு எழுந்ததால் முதல்வர் ஸ்டாலின் அவருடைய துணை பொதுச்செயலாளர் பதவியையும், அமைச்சர் பதவியையும் பறித்துள்ளார். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த முக்கியமான மின்சாரத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதவி மறுப்பு 

பொன்முடியின் வனத்துறை அமைச்சகம் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து த‌கவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக மாற்றப்பட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜனுக்கு மீண்டும் ஒரு இலாகா வழங்கப்படும் என தகவல்கள் கூறி வந்த நிலையில், அவருக்கு கூடுதலாக எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை. 'தனக்கு அதிகாரம் இல்லை' என சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசிய பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனுக்கு மீண்டும் பெரிய பதவி மறுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கொடுத்த அழுத்தம் 

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் திமுக மீது பெரும் அழுத்தம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்தே இரு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், ''இது தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்டாலின் தன்னார்வமாக எடுத்த முடிவு அல்ல. உச்சநீதிமன்றம் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டனர்'' என்றார்.

எஸ் பி வேலுமணி வீட்டை திடீரென தேடிச்சென்ற ரஜினி.! காரணம் என்ன.?

இது பெரும் அவமானம் 

தொடர்ந்து பேசிய கோவை சத்யன், ''இரண்டு அமைச்சர்களும் ஒரு தொடக்கம் மட்டுமே. மேலும் பல அமைச்சர்களின் உண்மை முகம் வெளியே தெரியப் போகிறது. ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை அமைச்சரவையை நடத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட அமைச்சரவையை வைத்துக் கொண்டு தமிழக மக்களின் நலனுக்காக அவரால் எப்படி எந்த நன்மையும் செய்ய முடியும்? இது பெரும் அவமானம்'' என்று கூறினார்.

மேலும் 7 அமைச்சர்கள் மீதான வழக்குகள்

கோவை சத்யன் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள மற்ற 7 அமைச்சர்கள் மீதான வழக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இது குறித்து பேசிய அவர், ''ஏப்ரல் 25 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி பி. செந்தமிழ்செல்வி ஆகியோரை 2007 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு வெவ்வேறு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் (DA) வழக்குகளில் இருந்து விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்ட அவரது மகன் பி. கதிரவன் மீதான விடுதலையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 

ஏப்ரல் 23 அன்று, திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து சேர்த்தல் வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது. அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்'' என்றார்.

தொடர்ந்து இது தொடர்பாக பேசிய கோவை சத்யன், ''பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரும் சொத்து குவிப்பு வழக்குகளை எதிர்கொள்கின்றன்ர். நவம்பர் 29, 2024 அன்று, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 2009 ஆம் ஆண்டு பேயன்விளை கிராமத்தில் அதிமுக ஊழியர்களைத் தாக்கியது தொடர்பான வழக்கில் அவரை விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது'' என்றார். 

ஐ.பெரியசாமி

மேலும், ''வீட்டுவசதி அமைச்சராக (2008–2009) இருந்தபோது, ​​மொகப்பேர் எரி திட்டத்தில் உயர் வருமானக் குழுவிற்கு நிலம் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான ஊழல் வழக்கு சட்டப்பூர்வ முன்னேற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. வழக்குத் தொடர அனுமதி தொடர்பான நடைமுறை சிக்கல்கள் காரணமாக, மார்ச் 2023 இல், சிறப்பு நீதிமன்றம் பெரியசாமியை வழக்கிலிருந்து விடுவித்தது. இருப்பினும், பிப்ரவரி 2024 இல், இந்த விடுவிப்பு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 8, 2024 அன்று, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெரியசாமி தாக்கல் செய்த மனுவில் தீர்வு காணும் வரை, உச்ச நீதிமன்றம் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது'' என்றும் கோவை சத்யன் தெரிவித்துள்ளார்.

முழு லிஸ்ட்டையும் கூறிய கோவை சத்யன் 

இந்த வழக்குகளைத் தவிர மாநிலத்தில் உள்ள திமுக மூத்த தலைவர்கள் மீது பல நிறுவனங்களால் தொடர் சோதனைகள் நடந்துள்ளன என்றும் கோவை சத்யன் கூறியுள்ளார். ''ஏப்ரல் 7 ஆம் தேதி, அமலாக்க இயக்குநரகம் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது மறைந்த சகோதரர் கே.என். ராமஜெயம், அவரது மற்ற சகோதரர்கள் கே.என். ரவி மற்றும் கே.என். மணிவண்ணன் மற்றும் நேருவின் மகன் அருண் நேரு ஆகியோரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. இது ராமஜெயம் நிறுவிய ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் பணமோசடி மற்றும் ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பானது. 

திமுக சொல்வது என்ன?

2023 நவம்பரில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வி. வேலு தொடர்பான வீடுகள் மற்றும் பிற சொத்துக்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. மாநிலத்தில் 37 இடங்களில் நடந்த சோதனைகள் அமைச்சருக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஐ.டி. துறை அப்போது கூறியது. சோதனைகளில் இருந்து ரூ.22 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக ஐ.டி.டி பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தது'' என்றார்.

இப்படியாக பல அமைச்சர்களின் மேல் கத்தி தொங்கி கொண்டிருப்பதால் பாஜக மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது திமுகவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு பாஜக தெரிவித்துள்ளது. அதே வேளையில் ''இந்த சோதனைகளுக்கு திமுக தயாராக உள்ளது. நீதிமன்றத்தில் எதையும் சந்திப்போம்" என்று திமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டை யாரும் சூறையாட முடியாது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!