சூடுபிடித்த விருதுநகர் களம்; விஜயகாந்த் மகனை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி..
வரும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரை எதிர்த்து ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில் தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அதிமுக 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதே போல் பாஜகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நேற்று முதல்கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அண்னாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், எல் முருகன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி ராதிகா சரத்குமார், கே.பி ராமலிங்கம், ஏ. பி முருகானந்தம் உள்ளிட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியை பொறுத்த வரை விருதுநகர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. எனினும் சிட்டிங் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் இந்த முறையும் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் தொகுதியை பொறுத்த வரை கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 2-ம் இடம் பிடித்தார்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிகவுக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்றும், இந்த தேர்தல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற எண்ணத்திலும் தேமுதிக விஜய பிரபாகரனை களமிறக்கி உள்ளது. இந்த சூழலில் அவரை எதிர்த்து ராதிகா சரத்குமாரை களமிறக்கி உள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. மாணிக்கம் தாகூர், ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் மூவரில் யார் வெற்றி பெற போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.