Annamalai : மக்களின் நலனுக்கான குரலாய்.. தமிழக பாஜகவின் குரல் ஒலிக்கும் - மக்களுக்கு நன்றி கூறிய அண்ணாமலை!
Loksabha Election 2024 : தமிழக மக்களின் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயக கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் ஒலிக்கும் என்று கூறியுள்ளார் திரு அண்ணாமலை.
தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கோவையிலும் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்.. "அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களுக்கு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெருமளவில் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்".
Lok Sabha Elections 2024 Results: வார்த்தை போரால் தமிழகத்தில் 15 இடங்களை கோட்டைவிட்ட பாஜக!
"இம்முறை நமது மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்ல முடியவில்லை என்கின்ற வருத்தம் இருந்தாலும், வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம். நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் வளங்களையோ, சாமானிய மக்கள் வரிப்பணத்தையோ, சுரண்டாமல் ஒரு மத்திய அமைச்சரின் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நல்லாட்சியை வழங்கியிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை".
"மேலும் நாட்டின் உட் கட்டமைப்பு, விவசாயம், சாமானிய மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல் அனைத்து பலன்களும் நேரடியாக மக்களை சென்றடைய வழிவகை செய்திருக்கிறார். நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் நலத்திட்டங்கள் தமிழகத்தின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் சென்றடைந்திருக்கிறது என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகளில் தமிழகம் முழுவதும் பரவலாக கிடைத்துள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது".
"மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவிருப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். நமது தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக தொடர தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது பிரதமர் அவர்களின் அடுத்த ஐந்து ஆண்டுகால ஆட்சி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன் நிறுத்தியதாக அமையும்."
"எங்களின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்கள்நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயக கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தன்னலமின்றி கடுமையாக உழைத்த தமிழக பாஜக சொந்தங்கள் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் நமது மக்கள் நலனுக்கான நமது உழைப்பை இரட்டிப்பாக்குவோம் நம் உழைப்பிற்கு நமது மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது". என்று அண்ணாமலை கூறியுள்ளார்.