"சர்வாதிகாரியிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்கவே இந்த போராட்டம்" - தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Campaign : தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் முதல்வர் ஸ்டாலின்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அப்போது பேசிய அவர்.. "இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற மகத்தான மனிதர்கள் பிறந்த மண்ணிற்கு இப்போது நான் வந்திருக்கிறேன். ஒரு வகையில் இப்பொழுது நடப்பதும் விடுதலை போராட்டம் தான். சர்வாதிகாரியின் ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் இது. தேர்தல் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றும் ஒரு அறப்போராட்டம் இது. இந்த அறப்போருக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்த கனிமொழியின் சொத்து மதிப்பு; பிரமாணபத்திரத்தில் வெளியான தகவல்
"கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எனது தங்கை கனிமொழிக்காக நான் வாக்கு சேகரிக்க வந்தேன். நீங்களும் அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழகத்திற்காகவும், இந்தியாவிற்காகவும் குரல் கொடுத்தார். அவர் குரல் கொடுத்தார் என்று சொல்வதைவிட கர்ஜனை செய்தார் என்று தான் கூற வேண்டும்".
"இதையெல்லாம் நான் பேசினால், நரேந்திர மோடி அவர்கள் வாரிசு அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விடுவார். எங்களைப் பற்றி விமர்சிக்க வேறு எதுவுமே இல்லாத காரணத்தினால் அவர்கள் கையில் எடுக்கும் ஒரு விஷயம் தான் வாரிசு அரசியல். நாங்கள் உழைப்பதற்காக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஊர் சுற்றுவதற்காக அல்ல".
"தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யும் கட்சி தான் திமுக. ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு பணியாற்றி விட்டு, அதற்காக எங்களை ஒப்படைத்துள்ள கட்சி தான் இந்த திராவிட முன்னேற்ற கழகம். இந்த தமிழ்நாட்டை எப்படியாவது அடிமைப்படுத்தி விட முடியாதா என்று கனவு காணுகின்ற உங்களின் தூக்கத்தை கெடுக்கின்ற வாரிசுகள் நாங்கள்".
"தூத்துக்குடி மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கனிமொழியை நீங்கள் என்றாவது மதித்ததுண்டா? நீங்கள் அவரை அவமதிக்கவில்லை, தூத்துக்குடி மக்களைத்தான் அவமதித்திருக்கின்றீர்கள். கடந்த ஆட்சியைப் பொருத்தவரை, தூத்துக்குடி என்றாலே நமது நினைவில் வருவது துப்பாக்கி சூடு தான். 13 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?".
"தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளி தான் அந்த சம்பவம். கொடூரமான அந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. 2018ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் உடனடியாக தூத்துக்குடிக்கு வந்தேன். துப்பாக்கி சூட்டின் சத்தமும் மக்களின் மரண ஓலங்களும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி என் மனதை விட்டு அகலவில்லை. அப்பொழுது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஊடகங்கள் கேட்ட பொழுது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. நானும் தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறியவர் எடப்பாடி" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
அவன் 25 பைசா குடுத்தா, நீ 50 பைசா குடு; தேர்தல் பார்முலாவை மேடையில் போட்டுடைத்த அதிமுக மா.செ.