Asianet News TamilAsianet News Tamil

மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தல் 2024க்கான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

Lok Sabha Election 2024 Tamil Nadu Congress Proposed Candidate List smp
Author
First Published Mar 19, 2024, 1:11 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், மதிமுக, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, நேற்று காலையில் மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருச்சி, தேனி, ஆரணிக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்!

தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சி விருப்பமனுவை பெற ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கன்னியகுமரி- விஜய் வசந்த், விருதுநகர்- மானிக்கம் தாகூர், சிவகங்கை - கார்த்திக் சிதம்பரம், கரூர் - ஜோதிமணி அல்லது பேங்க் சுப்பிரமணி, திருவள்ளுர்- சசிகாந்த் செந்தில் அல்லது விஸ்வநாதன் அல்லது ஜெயக்குமார், மயிலாடுதுறை - திருநாவுக்கரசர் அல்லது பிரவின் சக்ரவர்த்தி, கிருஷ்னகிரி - செல்லகுமார், கடலூர் -  கே எஸ் அழகிரி, திருநெல்வேலி - பீட்டர் ஆல்போன்ஸ் அல்லது ராமசுப்பு அல்லது அகஸ்டஸ் பிரபு அல்லது கேபிகே ஜெயக்குமார், புதுச்சேரி - வைத்தியலிங்கம் அல்லது நாராயணசாமி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios