காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது

Congress party working committee meeting in Delhi started to approve election manifesto

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கட்சிகளிடையே சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

முன்னதாக, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும். நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.” என பெண்களுக்கான ஐந்து வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் 2024: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

அதேபோல், பொதுத்துறை நிறுவனங்கள் அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 25 வயதுக்குட்பட்ட டிகிரி, டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். இது சட்டமாக்க்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும். சிறு தொழில்களைத் தொடங்கத் தயாராக இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாக ரூ.5000 கோடியில் ஸ்டார்ட்- அப் நிதி உருவாக்கப்படும்.

கிக் தொழிலாளர்கள் எனப்படும் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க நாடு முழுவதும் சட்டம் இயற்றப்படும். தேர்வு தாள் கசிவு விவகாரத்தைத் தடுக்க, காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்.  அரசு போட்டித் தேர்வுகளை அரசு மட்டுமே நடத்தும், அவுட்சோர்சிங் எதுவும் இருக்காது.” என்ற இளைஞர்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளும் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios