2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது இளம் எழுத்தாளர் லட்சுமிஹர்க்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது இளம் எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பால சாகித்ய புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனம் இந்திய இலக்கியத்தின் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது. இது தவிர ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளையும், குழந்தைகளுக்கான இலக்கியப் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகளையும் சாகித்ய அகாடமி வழங்குகிறது.
இந்த ஆண்டுக்கான இவ்விரு விருதுகளையும் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. இந்த விருதுகள், இந்தியாவின் 24 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இளம் மற்றும் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

யுவ புரஸ்கார் விருதுகள்:
சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுகள், 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எழுத்தாளர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் லட்சுமிஹர் இந்த விருதைப் பெறுகிறார். யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள இந்நூல் லட்சுமிஹர் எழுதிய நான்காவது சிறுகதைத் தொகுப்பு.
லட்சுமிஹர் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். பொறியியல் மற்றும் படத்தொகுப்பில் பட்டம் பெற்றவர். திரைப்பட உருவாக்கம் சார்ந்த பணிகளில் இயங்கி வருகிறார்.
பால சாகித்ய புரஸ்கார் விருதுகள்:
குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள், குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் வகையிலும், அவர்களுக்கு நல்லொழுக்கங்களையும், அறிவையும் போதிக்கும் வகையிலும் எழுதப்பட்ட நூல்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழில் இவ்விருது விஷ்ணுபுரம் சரணவனுக்குக் கிடைத்துள்ளது. அவரது ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நாவல் இவ்விருதுப் பெற்றுள்ளது. பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் என்ற ஊரில் பிறந்த விஷ்ணுபுரம் சரவணன், கட்டுரையாளர், கதைச்சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். ஆனந்த விகடன் விருது, வாசகசாலை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
