Asianet News TamilAsianet News Tamil

கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் திமுக மீது பட்டியலின மக்கள் கடும் கோபம் - எல்.முருகன்

தமிழகத்தில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால், பட்டியலின மக்களின் கடும் கோபத்திற்கு திமுக அரசு ஆளாகி இருப்பதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

L. Murugan has said that they are angry with the DMK government because of the attack against the scheduled caste people in TN vel
Author
First Published Jul 13, 2024, 5:18 PM IST | Last Updated Jul 13, 2024, 5:18 PM IST

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சார்பில் ஒரு மாய்மால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும் பட்டியலின மக்கள் மீது திடீர் பாசம் பொங்கி வழியத் தொடங்கி இருக்கிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களால் திமுக அரசு தமிழக மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ள போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; உண்மையான வெற்றி பாமக.வுக்கே - இராமதாஸ் விளக்கம்

இந்தப் பேரதிர்ச்சி அடங்குவதற்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள், தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஒரு தேசியக்கட்சியின் மாநிலத் தலைவர் கொலையின் மூலம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரித்து வருவதும் அம்பலமாகியுள்ளது. கட்சிப் பாகுபாடுகளைக் கடந்து, தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அனைத்துத் தரப்பினரும் இந்த படுகொலையை கண்டித்துள்ளதுடன், தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர். 

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து வரும் கொடூரத் தாக்குதல், தமிழகத்தை தாண்டி, தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையை எட்டியுள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களால், தமிழக மக்கள், குறிப்பாக  பட்டியலின மக்கள் போலி  திராவிட மாடல் திமுக அரசின் மீது பெரும்கோபம் கொண்டுள்ளனர். இந்த பின்னணியில் பட்டியலின மக்களின் கோபத்தை தணிக்க ஏதாவது செய்ய முடியுமா என்ற நோக்கில் சில அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்களது அறிவிப்புகள் அனைத்துமே எப்படிப்பட்ட மோசடி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். 

பட்டியலின மக்களை ஏமாற்றி அவர்களை வாக்கு இயந்திரமாக பயன்படுத்தும் திமுகவின் கபட நாடகத்தை யாரும் நம்பப்போவதில்லை. ஜாதி வேறுபாடு இல்லாத மயானங்களை கொண்டுள்ள கிராமங்களில், மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என 37 முன்மாதிரி கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் தமிழகத்தை மாற்றி விட்டதாக வாய் கிழியப் பேசும் திமுகவினருக்கு இதனை அறிவிக்க வெட்கமாக இல்லையா? 

மற்ற பல மாநிலங்களை விடவும் ஜாதிய வன்கொடுமையும் தீண்டாமையும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் அதிகமாக தலைவரித்து ஆடுகிறது. பொது மயானத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை புதைக்கவோ எரியூட்டவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

இறந்தவரின் உடலை சுமந்து கொண்டு மணிக்கணக்காக செய்வதறியாமல் திகைத்துப்போய் தவிக்கும் பட்டியலின மக்களின் கண்ணீர் கதைகள், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இவையெல்லாம் தெரியவில்லை என்றால், நானே அவரை அழைத்துச் சென்று இந்த அவலங்களைக் காட்டத் தயாராக இருக்கிறேன். 

விமான நிலையத்தில் ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்; ராஷ்மியின் செயலால் நெகிழ்ந்த ரசிர்கள்

இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பட்டியலின மக்களின் கண்ணீரைத் துடைக்க திராணியற்ற திமுக அரசு, பரிசுத் தொகை உயர்வு, படி உயர்வு என்று கதை அளந்து கொண்டு இருக்கிறது. பட்டிலயின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத் தடுக்க திராணியில்லாமல், கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் பல இடங்களில் இதனை திமுகவினரே தூண்டி விடும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. 

‘‘பள்ளி மாணவர் விடுதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி, 1400 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி பயின்று வருவோருக்கு வழங்கப்படும் உணவுப்படி 1500 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும்’’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து பட்டியலின மக்கள் சிரிக்கிறார்கள். தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான விடுதிகள் என்ன கதியில் இருக்கிறது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவாரா? அந்த விடுதிகளை இதுவரை அவர் சென்று பார்த்தது உண்டா?

இதுபோன்ற ஏதாவது ஒரு விடுதிக்கு நேரில் சென்று பார்த்து இருந்தால் அவருக்குத் தெரியும். மனிதர்கள் வசிக்க எந்தத் தகுதியும் இல்லாத சூழலில் தான் தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகள் இருக்கின்றன. அங்கு வழங்கப்படும் உணவின் தரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதெல்லாம் அதைச் சாப்பிடும் மாணவர்களுக்குத் தான் தெரியும்.

மாதத்திற்கு 1500 ரூபாய் கொடுப்பதையே சாதனையாக பீற்றிக் கொள்ளலாமா? இதை ஒரு சாதனையாக அறிவிக்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வெட்கப்பட வேண்டும். பட்டியலின சமூக மக்களை இந்த நிலையில் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக திமுக அரசு சுய தம்பட்டம் அடிப்பது அவமானம் இல்லையா? பட்டியலின  மக்களுக்கு அடிப்படை  வசதிகளை செய்து கொடுக்க முடியாத அவலத்தை வைத்துக் கொண்டு, இது தான் திராவிட மாடல் என பெருமை பேசும் துணிவு, மனசாட்சியற்ற திமுகவினருக்கு மட்டுமே இருக்க முடியும்.  

திமுக ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, ஆண்டு ஒன்றுக்கு 2000-க்கும் மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இருக்கின்ற 386 கிராம ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித் தலைவர்களாக இருக்கக் கூடிய 22 கிராம ஊராட்சி அலுவலகங்களில், அவர்கள் அமர நாற்காலி கூட வழங்கப்படவில்லை என, திமுகவின் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பு ஆய்வு நடத்தி அறிவித்துள்ளது. இவை எல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? இதுமட்டுமல்ல...

‘‘சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை மறுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள்; ஊராட்சி மன்றக் கூட்டத்தின் போது, நாற்காலியில் அமரவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித் தலைவர்; தனிநபர் பிரச்சனைகளால் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின கிராமம்; ஜாதிய கட்டுப்பாடுகளை மீறி காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள்; அரசுப் பள்ளியில் பட்டியலின சமுதாயம் சாதி ஒன்றைச் சேர்ந்த சமையல்காரர் சமைத்த உணவை உண்பதற்கு, தங்கள் குழந்தைகளுக்குத் தடை விதித்த பெற்றோர்; பெட்டிக் கடையில் பணம் கொடுத்து வாங்க முயன்றும் தின்பண்டம் மறுக்கப்பட்ட பட்டியலின குழந்தைகள் என்று, மேலே கூறியவை அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளில் ஊடகங்களில் வந்த செய்திகள்.

பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமையை கூட தர மறுப்பது தான்  போலி திராவிட மாடல் ஆட்சி. இந்த அவலத்தை பெருமையாக வெளியே சொல்ல இந்த அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை. மற்ற மாநிலங்களில் இருக்கும் அளவிற்காவது, பட்டியலின மக்களுக்கு அடிப்படை வாழ்வுரிமையை வழங்குவது என்பது ஒரு அரசின் அடிப்படை கடமை. திமுக அரசு இதற்கு துரும்பையாவது தூக்கிப்போடுமா என்ற கேள்வி தான் ஒவ்வொரு பட்டியலின சமூக மக்களின் மனங்களிலும் எழுகிறது. 
இதற்கு பதில் சொல்வாரா மு.க.ஸ்டாலின்..?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios