கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க இரு கூடுதல் டி.எஸ்.பிக்கள், 3 டி.எஸ்.பிகள் அடங்கிய தனிப்படை அமைத்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், சதீசன், திபு உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறு விசாரணை நடந்து வருகிறது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் போலீசார் பல்வேறு சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க:மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..
இதுவரை தனிப்படையினர் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினர் விவேக், கொடநாடு மேலாளர் நடராஜன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினர். ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க இரு கூடுதல் டி.எஸ்.பிக்கள், 3 டி.எஸ்.பிகள் அடங்கிய தனிப்படை அமைத்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:அண்ணன் திமுக தலைவர்..! தங்கை துணைப்பொதுச்செயலாளர்..! வாரிசு அரசியலை உறுதிப்படுத்துகிறது- தமிழிசை
