100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படவில்லை. 125 நாள் வேலை நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எந்த பெயர் வைத்தால் நமக்கு என்ன? நீ 125 நாள் வேலையை கொடுத்தால், அதற்குரிய கூலியை கொடுத்தால் போதும்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக வி.பி. ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கி வந்த நிலையில், புதிய சட்டம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்துக்கு புதிய பெயர்

ஆனால் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஏற்கெனவே இருந்ததை விட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் இது மாநிலங்களுக்கு பெரும் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதிய வி.பி. ஜி ராம் ஜி திட்டத்துக்கு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 125 நாள் வேலை என்பது ஏமாற்று வேலை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த திட்டத்துக்கு என்ன பேரு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் 125 நாள் வேலை கொடுக்க வேண்டும். கூலி கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துளார்.

வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக‌

இது தொடர்பாக பெண்கள் மத்தியில் பேசிய அவர், ''150 நாள் வேலை நாட்கள் அதிகரிப்படும். 350 ரூபாய் கூலி கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இதெல்லாம் அவர்களால் கொடுக்க முடியவில்லை. ஆனால் இப்போது 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

எந்த பெயர் இருந்தால் என்ன? வேலை, கூலியே முக்கியம்

100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படவில்லை. 125 நாள் வேலை நாட்களாக மத்திய அரசு அதிகரித்துள்ளது. இந்த திட்டத்துக்கு எந்த பெயர் வைத்தால் நமக்கு என்ன? நீ 125 நாள் வேலையை கொடுத்தால், அதற்குரிய கூலியை கொடுத்தால் போதும். நீங்கள் கஷ்டத்துக்கு தான் வேலைக்கு போகிறீர்கள். எந்த பெயர் வைத்தால் என்ன? நமக்கு வேலையும், கூலியும் தான் முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார்.