ராமேசுவரத்தில் நடைபெற்ற 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிறைவு விழாவில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். காசிக்கும் தமிழுக்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பையும், பாரதத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்திப் பேசினார்.
ராமேசுவரத்தில் நடைபெற்ற 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிறைவு விழாவில், இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்றுச் உரையாற்றினார்.
காசியும் தமிழும்
ராமேசுவரம் மண்ணில் இந்த விழாவைக் கொண்டாடுவது குறித்துப் பேசிய அவர், ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் பிறந்த மண்ணில் காசியும் தமிழும் சங்கமிக்கும் இந்த நிறைவு விழா நடைபெறுவது அனைவருக்கும் பெருமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
பாரதத் தாயின் பாதங்களை வணங்குபவர்கள் யாரும் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தெளிவுபடுத்திய அவர், தேசத்தின் ஒரு கண்ணாகப் பாரதமும், மறு கண்ணாகத் தாய்மொழியான தமிழும் திகழ்வதாக உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
தொன்மையான மொழியும் நகரமும்
பிரதமர் நரேந்திர மோடியின் வரிகளை நினைவுகூர்ந்த அவர், தொன்மையான காசி நகரமும், உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியும் இணைவதுதான் உண்மையான 'காசி தமிழ் சங்கமம்' என்று புகழாரம் சூட்டினார்.
"காசியும் ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். எத்தனை மொழிகள் பேசினாலும் தர்மத்தின் அடிப்படையில் நாம் வாழ வேண்டும் என்ற தத்துவமே இந்தியாவை ஒரு தேசியமாக ஒருங்கிணைத்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாரதியாரின் தேசியக் கனவுகளைப் பிரதமர் மோடி நனவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, அதில் தமிழகம் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறினார். வளமான தமிழகமே வளமான இந்தியாவிற்கு அடிப்படை என்றும், இந்தியத் திருநாட்டை எந்தவொரு தீய சக்தியாலும் ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


