கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த நெரிசலுக்கு விஜய் மீது செருப்பு வீசப்பட்டதே காரணம் என தவெக தரப்பு குற்றம்சாட்டிய நிலையில், அது தொடர்பான வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தச் சோக நிகழ்வுக்குக் காரணம் என்ன என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், பிரசாரத்தின்போது விஜய் மீது செருப்பு வீசப்பட்ட காட்சி அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலுக்கு செருப்பு வீச்சுதான் காரணமா?
பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாகவே இந்த உயிர்ச்சேதம் நிகழ்ந்தது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், தவெக தரப்பினர் முதலில் பேசும்போது, "பிரசாரத்தின்போது யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பைத் தூக்கி வீசியதுதான் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவும், நெரிசல் அதிகரித்துக் கட்டுக்கடங்காமல் போகவும் முக்கியக் காரணம்" என்று குற்றம்சாட்டினர்.
செருப்பு வீசியவர் யார்? – வீடியோ வெளியீடு
இந்தச் சூழலில், தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்தச் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கூட்டத்தின் மத்தியிலிருந்து விஜய் நின்றிருந்த பிரசார வாகனத்தை நோக்கி, செருப்பு, தண்ணீர் பாட்டில் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, விஜய் மீது செருப்பை வீசியவர் யார் என்பதைக் காட்டும் தெளிவான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் சுதாரித்துக்கொண்டு, அவர் மீது வீசப்பட்ட அந்தப் பொருட்களைத் தடுத்து அப்புறப்படுத்தியதாகவும், அதனால் விஜய் காயமின்றித் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
41 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்தக் கூட்ட நெரிசலுக்கு, விஜய் மீதான செருப்பு வீச்சும் ஒரு காரணமா அல்லது கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதா என்பது குறித்து அதிகாரபூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
