Karur Stampede: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மற்றும் அதிமுக, தவெக போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிஐக்கு மாற்றுவது இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு வந்தது. பின்னர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி? நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு அதிகரிக்கக்கோரிய மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் 2 வாரங்களில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.