Karunas : தமிழக உரிமைகளை பாஜக பிடுங்கிய போது ஒரு நாளும் இபிஎஸ் உண்ணாவிரதம் இருந்ததில்லை- விளாசும் கருணாஸ்
பா.ஜ.க.வின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களுக்கும் ஆதரவாக இருந்தது செயல்பட்ட ஓடிசா நவீன் பட்நாயக்கும். ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை அ.தி.மு.க.. மறந்து விடக் கூடாது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி உண்ணாவிரதம்- கருணாஸ் விமர்சனம்
விஷச்சாராய மரணம் தொடர்பாக அதிமுகவின் தொடர் போராட்டங்களை விமர்சித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, எடப்பாடி தமிழ்நாட்டு உரிமை மீட்க ஒரு நாளும் உண்ணாவிரதம் இருந்ததில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடிய போது அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்துவிட்டு தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவராச்சே! இது மட்டுமா. எத்தனையோ. அத்தனை தகிடுத்தத்தங்களையும், மறந்துவிட்டு இன்று உண்ணாவிரத நாடகமாடுகிறார் எடப்பாடி!
எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழவில்லையா?
சட்டமன்றத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சனைக்கு பேசாது மௌனமாய் இருந்த எதிர்கட்சி எடப்பாடி இன்று கள்ளக்குறிச்சிக்கு காவடி ஆடுகிறார். அவர் ஆட்சியில் இருந்தபோது, சபாநாயகர் தன்பாலை வைத்து என்னென்னவெல்லாம் செய்தார் மறந்து விட்டார் போல! எத்தனை முறை மக்கள் பிரச்சனையை பேச வந்த திமுகவை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றினார்! அதுவும் மறந்துவிட்டார் போல, எல்லாம்.. நாடகம்!! எடப்பாடி செய்வது அரசியல் நாடகம் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து உண்மையாகவே எடப்பாடி விவாதிக்க தயாராக இல்லை. ஆனால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை வைத்து திட்டமிட்டு அரசியல் செய்கின்றார். ஏன்? எடப்பாடி ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழவில்லையா? அதற்காக நான் கள்ளக்குறிச்சியை ஞாயப்படுத்தவில்லை! அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன.
சிபிஐ விசாரணை கேட்பது ஏன்.?
ஆனால் இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன! பா.ஜ.க. ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் ஏழெட்டு ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறின ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாநில முதல்வர்களை பதவி விலகக்கோரி யாரும் கூறவில்லை. அதேபோல் அதிமுக ஆட்சியில் நடந்த மரணங்களுக்கு யாரும் பதவி விலகுமாறு கூறவில்லை. ஆனால் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு மு.க. ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.. என்ற அற்ப ஆசை தலைக்கு ஏறுவதுதான் ஏன் என்று தெரியவில்லை?? இது என்ன தர்ம ஞாயம்! அன்று தூத்துக்குடி காவல் நிலையத்தில் இருவர் இறந்ததற்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம்" என்று பெரிய புத்திசாலி போல கேள்வி கேட்கிறார் பழனிசாமி,
அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்திருந்தால் சி.பி.ஐ. விசாரணை கூட கேட்கலாம் தவறில்லை. ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் எடுத்ததை பார்த்த பிறகும், சி.பி.ஐ விசாரணைக்கு கேட்கிறார் என்றால், அதுதான் எடப்பாடியின் அரசியல் நாடகம்! அதிமுகவின் தொடர் தோல்வியை மூடிமறைக்க எடப்பாடி காட்டும் கபடநாடக வித்தை இது எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. வந்த நாளிலிருந்து எடப்பாடி அதிமுக வந்த தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி! அதனால்தான். 'தேர்தல் நேர்மையாக நடக்காது' என்று சொல்லி விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித் திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி ஆடத் தெரியாதவளுக்கு வாசல் கோணல் கதைதான்!. இவரது தேர்தல் புறக்கணிப்புக்குப் பின்னால் இரண்டு சூழ்ச்சிகள் இருக்கின்றன.
பாஜக ஆதரவான கட்சி தோல்வி
ஒன்று. அ.தி.மு.க போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுப் போகும். எனவே அந்தத் தோல்வி முகத்தை மறைக்கலாம் என்பது இன்னொன்று தனது எஜமானன் ரகசிய உறவாளன் பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து தனது அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளவது! வேறென்ன காரணம் இருக்க முடியும்!!?? பா.ஜ.க.வின் பத்தாண்டுகால பாசிச்ச அழிவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போன கட்சி அ.தி.மு.க. சிறுபான்மை இசுலாமிய இன மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்தது அதிமுக தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள் இதேபோல்தான் பா.ஜ.க.வின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களுக்கும் ஆதரவாக இருந்தது செயல்பட்ட ஓடிசா நவீன் பட்நாயக்கும். ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை அ.தி.மு.க.. மறந்து விடக் கூடாது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.