விஜய் எந்த சித்தாந்தத்தோடு வருகிறார். எந்த உள்நோக்கத்தோடு வருகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் 200 கோடி ரூபாயை இழந்து விட்டு 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிப்பதற்காக வருகிறார் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் சினிமாவில் ரூ.200 கோடியை இழந்து விட்டு, அரசியலில் ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வந்துள்ளதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய கருணாஸ், ''கடல் தாமரை வந்தால் குளம் நாசமாகி விடும். படர் தாமரை வந்தால் உடல் நாசமாகி விடும். தாமரை வந்தால் தமிழ்நாடே நாசமாகி விடும்.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்
மக்களுக்காக யோசிக்கக்கூடிய, மக்களின் நலன்களுக்காக திட்டங்களை செய்யக்கூடிய அமைச்சர், முதலமைச்சர் தான் நமக்கு தேவை. அந்த முதலமைச்சர் தான் ஸ்டாலின். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக, மக்களுக்கு தினம்தோறும் திட்டங்களை கொண்டு வரக்கூடியவராக ஸ்டாலின் உள்ளார்.
ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பம்.
விஜய் மீது அட்டாக்
அவர் வருகிறார்; இவர் வருகிறார் என்கிறார்கள். எவர் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். அது பெரிது அல்ல. அவர் (விஜய்) எந்த சித்தாந்தத்தோடு வருகிறார். எந்த உள்நோக்கத்தோடு வருகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் 200 கோடி ரூபாயை இழந்து விட்டு 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிப்பதற்காக வருகிறார்.
தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்
ஆனால் இங்கே கோடி பெரிது அல்ல என்று கருதி தியாக வாழ்க்கை வாழக்கூடிய, மக்களுக்கான வாழ்க்கையை வாழக்கூடிய ஸ்டாலினும், அவரது மகனான உதயநிதியும் இருக்கும்போது தான் நமது உரிமைகள், நமது தமிழ்நாட்டுக்கான பாதுகாப்பு, மாநிலத்தின் சுயாட்சி சட்டரீதியாக பாதுகாக்கப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி மீதும் சரமாரி தாக்கு
எடப்பாடி கதை முடிந்து விட்டது. என்னை உருவாக்கியது எடப்பாடியோ, டிடிவியோ அல்ல. என்னை உருவாக்கியது புரட்சித் தலைவி அம்மா. அவங்க எனக்கு சீட் கொடுத்தாங்க. நான் ஜெயித்தேன். அம்மா இறந்தவுடன் நான் வந்து விட்டேன். நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். இனி வாழ்நாள் முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று அம்மா சொன்னார். ஆனால் எடப்பாடி நான்கரை ஆண்டு ஆட்சியில் தனது ஆட்சியை காப்பாற்ற, தான் பணம் சம்பாதிக்க, தனது சமூகத்தை பாதுகாக்க ஆட்சியையும், கட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.


