தமிழகத்தில் பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார ரயிலில் பயணம் செய்தார். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர். அதை ரீல்ஸாக எடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை தடுத்து விட்டு, திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

வடமாநில இளைஞரை வெட்டிய சிறுவர்கள்

ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் ரயில் நிலையத்தில் வைத்து அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை ரீல்ஸ் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை அங்குள்ள மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கஞ்சா போதையில் சிறுவர்கள் வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இதுபோல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்

இந்த நிலையில், தமிழகத்தில் இனிமேல் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தி மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''தமிழக காவல்துறை தங்கள் முழு பலத்தை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். பொதுமக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.